அம்பன் புயல் சீற்றம்.. நாளை காலை வலுவிழக்கும்.. ஒடிசாவில் மரங்கள் சாய்ந்தன..

மேற்கு வங்கம் அருகே வங்கக் கடலில் அம்பன் புயல் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து நாளை காலை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து 480 கி.மீ. தொலைவில் நேற்று மையம் கொண்டிருந்தது. அது நகர்ந்து பாரதீப்பில் இருந்து தென்கிழக்கில் 125 கி.மீ. தொலைவில் இன்று காலை மையம் கொண்டிருந்தது. இன்று பிற்பகலில் அது கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து, நாளை காலையே கரை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேச நாட்டின் ஹட்டியா தீவுக்கு இடையே தற்போது நிலை கொண்டுள்ள அம்பன் புயல், வடகிழக்காக நகர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழக்கும். இதன்பின், மெதுவாகக் கடலுக்குள் நகரும் என்று கூறியுள்ளது.

மேலும், புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா, மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதலே புயல் காற்று வீசத் தொடங்கி விட்டது. புயலின் தீவிரம் காரணமாக அந்த மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முர்சிதபாத், நாடியா மாவட்டங்களில் இன்று மாலை முதல் இரவு வரை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கரையோர மாவட்டங்களில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

More News >>