கரை கடந்தது அம்பன் புயல்.. மே.வங்கம், ஒடிசாவில் வீடுகள், மரங்கள் சாய்ந்தன..
மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு அம்பன் புயல் கரை கடந்தது. மேற்குவங்கத்தில் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் மெல்லமெல்ல நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து தென்கிழக்கில் 125 கி.மீ. தொலைவில் நேற்று மையம் கொண்டிருந்தது. இதன்பின், மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேச நாட்டின் ஹட்டியா தீவுக்கு இடையே சுந்தர்பான்ஸ் அருகே நேற்று மாலை 3 மணியளவில் கரையைக் கடந்தது.
மேலும், புயல் கரையைக் கடக்கும் போது, ஒடிசா, மேற்கு வங்க மாநில கடலோரப் பகுதிகளில் மணிக்கு 165 முதல் 180 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. முன்னதாக, ஒடிசாவில் ஒன்றரை லட்சம் பேரும், மேற்குவங்கத்தில் 5 லட்சம் பேரும் பாதுகாப்பான பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.மேற்குவங்கத்தில் வடக்கு, தெற்கு பர்கானா மாவட்டங்கள், மித்னாபூர், உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன், மழையும் பெய்தது. பல சாலைகளில் மரங்கள் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. கொல்கத்தாவிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. கொல்கத்தாவில் புயலின் போது மின்சார டிரான்ஸ்பர் தீப்பிடித்து வெடித்த காட்சிகள், சமூக ஊடங்களில் வைரலாக பரவியது. கொல்கத்தா விமான நிலையத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டதால், விமான நிலையம் மூடப்பட்டது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், கொரோனாவை மிக மோசமான சூழ்நிலையை அம்பன் புயல் ஏற்படுத்தி விட்டது. நான்கைந்து மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புயல், மழையால் இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 10, 12 ஆக இருக்கலாம் என்று தகவல்கள் வருகிறது. பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.ஒடிசாவில் பூரி, ஜெகத்சிங்பூர், பாலசோர் உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் சுமார் 40 மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழு இயக்குனர் பிரதான் தெரிவித்துள்ளார்.