சீனா வேண்டுமென்றே கொரோனா பரப்பியது.. டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்.

சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பி விட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 90 நாடுகளுக்கு பரவியது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் 94 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, சீனா திட்டமிட்டு இந்த நோய் குறித்து உலக நாடுகளுக்குத் தகவல் தராமல் மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனமும் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, அதற்கான அமெரிக்க நிதியை நிறுத்தினார். பின்னர், ஒரு முறை சீன அதிபர் ஜின்பிங்கிடம் டிரம்ப் பேசினார். சீனாவின் அனுபவங்களைக் கேட்டறிந்ததாக டிவிட்டரில் பதிவிட்டார்.

இதற்குப் பிறகு மீண்டும் சீனா மீது டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அதற்குச் சீனாவின் செய்தி தொடர்பாளர் பதிலடி கொடுத்தார். இதை டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சீன செய்தி தொடர்பாளர் முட்டாள்தனமாகப் பதில் கொடுக்கிறார். தாங்கள் பட்ட துன்பங்களை உலக நாடுகளும் அனுபவிக்கட்டும் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு சீனா இந்த வைரஸ் நோயைப் பரப்பி விட்டிருக்கிறது. இந்த வைரஸ் குறித்து முன்கூட்டியே தகவல் தராமல் மறைத்தது மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகச் சீனா பேசுவது ஏற்க முடியாதது. அந்த செய்தி தொடர்பாளர் அவராகப் பேசவில்லை. அவருக்கு மேல் இருப்பவர்களிடம்(சீன அதிபர்) இருந்து வந்ததைப் பேசுகிறார். சீனா நினைத்திருந்தால் இந்த வைரஸ் நோய் பரவாமல் ஈசியாக தடுத்திருக்க முடியும். ஆனால், அதை அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

More News >>