சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
சென்னை: கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் அடையாறு ஆற்றில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை, பாரிமுனை பகுதியை சேர்ந்தவர் செல்வரங்கம். இவரது மகள் ஜீவிதா (25). இவர், வானகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், ஆவடியை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ரோஸ் என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வைசாலி என்ற ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் ரோசுக்கும் சக பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது, ஜீவிதாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால், ஜீவிதாவிற்கும் ரோசிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரோசும் அவரது குடும்பத்தினரும் ஜீவிதாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்த ஜீவிதா அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், இரு குடும்பத்தாரும் சமாதானப்படுத்தி ஜீவிதாவை ரோசுடன் அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், ரோசுக்கும் ஜீவிதாவிற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது பெரிய பிரச்னையாகி உள்ளது. அப்போது, ரோஸ் ஜீவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த சனிக்கிழமை தனது தோழி வீட்டிற்கு செல்வதாக சென்ற ஜீவிதா கடற்கரை செல்லும் ரயிலில் ஏறி உள்ளார். பின்னர், அவரது தாய்க்கு போன் செய்து நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். தான் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாகவும், குழந்தையை பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.
பின்னர், கிண்டியில் இருந்து சைதாப்பேட்டை செல்லும் வழி தடத்தில் அடையாறு ஆற்றின் மீது ரயில் சென்றபோது திடீரென ஜீவிதா கீழே குதித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து, போலீசார் உடனே மீட்புக் குழுவினருடன் விரைந்தனர். ஆனால், அதற்குள் ஜீவிதா இறந்துவிட்டதை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜீவிதாவின் கணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.