கொல்கத்தா ஏர்போர்ட்டில் புயலால் பலத்த சேதம்... விமானச் சேவை தாமதமாகும்..

கொல்கத்தா விமான நிலையத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிலையமே மூடப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மூன்று முறை நீட்டிக்கப்பட்டு மே 31ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு விமானச் சேவையும் வரும் 25ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் தற்போது அம்பன் புயல் தாக்கியுள்ளது. வடக்கு, தெற்கு பர்கானா மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை விடப் புயல் பாதிப்பு மோசமாக உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் புயலால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ஓடுதளம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து, விமான நிலையம் மூடப்பட்டது. வரும் 25ம் தேதிக்குள் விமான நிலையச் சேதங்கள் சரிசெய்யப்பட்டு, விமான போக்குவரத்து தொடங்குமா அல்லது கொல்கத்தாவில் மட்டும் விமானப் போக்குவரத்து தாமதமாகுமா என்பது தெரியவில்லை.

More News >>