சென்னையில் தொடரும் கொரோனா பரவல்... பாதிப்பு 8795 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது. அதிகபட்சமாக, சென்னையில்தான் இது வரை 8795 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது கொரோனா வைரஸ் நோய். இந்தியாவிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்குப் பரவியுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 500, 600 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று(மே21) மட்டும் புதிதாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களும் அடக்கம். அதாவது, சிகாகோவிலிருந்து வந்த 6 பேர், மகாராஷ்டிராவிலிருந்து திரும்பி வந்த 76 பேர், மஸ்கட், கேரளா, டெல்லி, மேற்கு வங்கத்திலிருந்து வந்த தலா ஒருவர் என 87 பேருக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது.தற்போது மாநிலம் முழுவதும் 13.967 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 400 பேரையும் சேர்த்து மொத்தம் 6282 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 7 உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று 12,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 3 லட்சத்து 55,893 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் தான் தொடர்ந்து நேற்றும் புதிதாக 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது. இது தவிரச் செங்கல்பட்டில் 34 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், ராணிப்பேட்டையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் மூலமும், அடுத்ததாக கோயம்பேடு மார்க்கெட் மூலமும் கொரோனா பரவியிருந்தது. தற்போது அவை கட்டுப்பட்டு விட்டாலும், மகாராஷ்டிரா உள்படப் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது. சென்னை தவிரப் பிற மாவட்டங்களில், வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இப்போது கொரோனா தொற்று காணப்படுகிறது. மற்றபடி அந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இல்லை.

More News >>