மம்மூட்டியின் 39 வருட நண்பர்.. நடிகரின் நெகிழ்ச்சியான வீடியோ பதிவு..
மலையாள நடிகர்களாக இருந்தாலும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகம். மோகன்லாலுக்கு நேற்று 60வது பிறந்த தினம் இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்து சொன்னார்கள். குறிப்பாக நடிகர் மம்மூட்டி, மோகன்லால் பற்றி நெகிழ்ச்சியான வீடியோ வெளியிட்டு தங்கள் இருவரின் நட்பைப் பகிர்ந்துகொண்டார்.
மம்மூட்டி கூறும்போது,கடந்த 39 வருடங்களாக மோகன்லாலை எனக்குத் தெரியும். இருவரும் சேர்ந்து படயோட்டம் என்ற படத்தில் நடித்தோம். 1982ம் ஆண்டு இப்படம் வெளியானது. அப்போது முதல் இருவரும் நண்பர்களாகப் பழகி வருகிறோம். காலம் தான் ஓடியிருக்கிறதே தவிர எங்கள் நட்பு அப்படியே தொடர்கிறது. லால் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
எனது கடினமான காலங்களில் அவர் எனக்குப் பலமாக இருந்தார். என்னை அவர் சகோதரா என்று அழைக்கும் போதெல்லாம் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன். அதுபோன்ற உணர்வை வேறு யாரிடமும் நான் உணர்ந்ததில்லை. என் குடும்பத்தில் ஒருவராக அவர் இருக்கிறார். எனது மகன் திருமணத்தை நடத்தி வைத்ததே மோகன்லால்தான். அவருடைய மகன் பிரணவ் சினிமாவில் அறிமுகம் ஆகும்போது என் வீட்டுக்கு அவரை அழைத்து எனது ஆசியைப் பெற்றுச் சென்றார். மோகன்லால் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்றார்.