பாஜகவில் சேர்ந்தார் வி.பி.துரைசாமி.. புதிய பதவி கிடைக்குமாம்..
திமுகவிலிருந்து விலகிய வி.பி.துரைசாமி, இன்று பாஜக தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.திமுக துணைப் பொதுச் செயலாளராக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி இருந்து வந்தார். திமுக தலைவராகக் கருணாநிதி இருந்த போது, 1989 முதல் 1991 வரையும், 2006 முதல் 2011 வரையும் துணைச் சபாநாயகராகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்தார். சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் வி.பி.துரைசாமி தனக்கு சீட் தர வேண்டுமென்று கட்சித் தலைமையிடம் கோரினார். ஆனால், அவருக்கு எம்.பி. சீட் தரப்படவில்லை. அதே சமயம், அவர் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜுக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.
இதனால், அதிருப்தியிலிருந்த துரைசாமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு, தமிழக பாஜக அலுவலகத்திற்குச் சென்று, மாநில பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்துப் பேசினார்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தான் கட்சியில் து.பொ.செ.வாக இருந்தாலும், நாமக்கல் மாவட்ட திமுகவில் யாரை மாற்றினாலும் என்னிடம் கட்சித் தலைமை ஆலோசிப்பதில்லை என்றும், அதேசமயம் தலைமைக் கழக பொறுப்புகளில் உள்ள துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரின் மாவட்டங்களில் கட்சிப் பதவிகளில் மாற்றம் செய்தால் அவர்களிடம் தலைமை ஆலோசிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த சூழ்நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து துரைசாமியை நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜ் எம்.பி.யை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். இதையடுத்து, வி.பி.துரைசாமி இன்று காலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். மாநில பாஜக தலைவர் எல்.முருகனுக்குப் பூங்கொத்து அளித்து பாஜகவில் துரைசாமி சேர்ந்தார். அவருக்கு முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பின்னர், பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கும் துரைசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
வி.பி.துரைசாமி கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் துணைச் சபாநாயகராக இருந்தவர். 1991ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த கட்சியில் சேர்ந்து சில பதவிகளைப் பெற்றார். அந்த ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் திமுகவிற்கு வந்து துணைச் சபாநாயகர் பதவியைப் பிடித்தார்.தற்போது பாஜகவில் அவருக்குத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.