மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி.. பிரதமர் மோடி அறிவிப்பு

அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அம்பன் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவை விட மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 72 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவிலும், வடக்கு, தெற்கு பர்கானா மாவட்டங்கள், மித்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அம்பன் புயல், மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர், அவர் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ஆலோசித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:கடந்த ஆண்டு மே மாதம் நாம் தேர்தலை எதிர்கொண்ட நிலையில், ஒடிசாவில் புயல் தாக்கியது. இப்போது மேற்கு வங்கத்தில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு அனுப்பப்படும். மத்திய அரசின் நிவாரண உதவியாக உடனடியாக இம்மாநிலத்திற்கு ரூ.1000 கோடி வழங்கப்படும். மேலும், புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். புயல் நிவாரணப் பணிகளில் முதல்வர் மம்தா சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இது போன்ற தருணங்களில் நாங்கள் உதவியாக இருப்போம்.இவ்வாறு மோடி தெரிவித்தார்.

More News >>