சென்னையில் 9364 பேருக்கு கொரோனா..

சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9364 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்கு பரவியுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 500, 600 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று(மே22) மட்டும் புதிதாக 786 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடக்கம். அதாவது, மகாராஷ்டிரா 66, டெல்லி 13, மேற்குவங்கம் 6, ஆந்திரா 2, குஜராத் 1, மத்தியப் பிரதேசம் 1, ஒடிசா 1, தெலங்கானா 1 என்று வெளிமாநிலங்களில் இருந்து வந்த 92 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.தற்போது மாநிலம் முழுவதும் 14.783 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 846 பேரையும் சேர்த்து மொத்தம் 7,128 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 4 உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று 12,046 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் 3 லட்சத்து 67,939 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில்தான் தொடர்ந்து நேற்றும் புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 9364 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர செங்கல்பட்டில் 40 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், திருவள்ளூரில் 39 பேருக்கும், ராமநாதபுரத்தில் 7 பேருக்கும், தேனியில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் மூலமும், அடுத்ததாக கோயம்பேடு மார்க்கெட் மூலமும் கொரோனா பரவியிருந்தது. தற்போது மகாராஷ்டிரா உள்பட பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக கொரோனா பரவி வருகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இப்போது கொரோனா தொற்று காணப்படுகிறது. மற்றபடி அந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இல்லை.

More News >>