திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திடீர் கைது.. வன்கொடுமை சட்டத்தில் வழக்கு..

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என மறந்து விடக் கூடாது என்று குறிப்பிட்டார்.

இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தலித் மக்கள் குறித்து அவதூறாக அவர் பேசி விட்டார் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவர் ஒரு விளக்கம் அளித்தார். தலித் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனத்தால் தான் பேசியதை திரித்துக் கூறுகிறார்கள் என்றும், அப்படிப் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். ஆர்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சிலர் கோரினர்.

இந்நிலையில், ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளில் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக, அரசியல் தலைவர்கள் எப்படி கைது செய்யப்படுவார்களோ, அதே போல், இன்று அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் சென்ற மத்திய குற்றப்புலனாய்வுத் துறை போலீசார், அவரை கைது செய்தனர். கைதாகும் போது அவர் இருமியதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதாகும் முன்பாக ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா தடுப்புக்கான உபகரணங்கள் வாங்கியதில் நடந்த ஊழல்கள் குறித்து நான் சுட்டிக்காட்டினேன். அதற்குப் பழிவாங்குவதற்காக என்னை இப்படி கைது செய்துள்ளனர். பிப்ரவரி 15ம் தேதி நான் பேசியதை சமூக ஊடகங்களில் திரித்து வெளியிட்டிருக்கிறார்கள்என்று தெரிவித்தார். இதற்கிடையே, தலைமைச் செயலாளர் சண்முகத்தை திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியினர் சந்தித்து விட்டு வந்த போது, தயாநிதி மாறன் அளித்த பேட்டியும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தலைமைச் செயலாளர் தங்களை அவமதித்ததாக டி.ஆர்.பாலு கூறினார். அப்போது தயாநிதி மாறன், நாங்கள் தீண்டத்தகாதவர்களா? என்ற வகையில் பேசியிருந்தார்.

தலித் மக்களைத் தீண்டத்தகாத மக்கள் போல் குறிப்பிட்டுப் பேசியதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தயாநிதி மாறன் மீதும் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, அவரும் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியை இத்தனை நாட்கள் கழித்து இன்று கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும், பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ஐகோர்ட்டை அவமதிக்கும் வகையில் பேசிய போதும், மீடியாவில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரை ஏன் கைது செய்ய தமிழகக் காவல்துறை முயற்சிக்கவே இல்லை என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

More News >>