கிண்டி எஸ்டேட் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் திறப்பு..
சென்னை கிண்டி தொழிற்பேட்டை உள்பட 17 தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், நாளை முதல் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நுழைந்த சமயத்தில் மார்ச் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, வெளியில் சுற்றியவர்கள் மீது போலீசார் பல்வேறு வழிகளில் கடும் நடவடிக்கைகளைமேற்கொண்டனர். இன்னொரு புறம், டெல்லி மாநாட்டில் பங்கேற்று வந்தவர்களால்தான் கொரோனா பரவுகிறது என்று சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷங்களும் காணப்பட்டன.
ஆனால், இப்போது சென்னையிலேயே 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி விட்டது. இப்போது மத்திய, மாநில அரசால் அதை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாமல், ஊரடங்கை நீட்டிக்கவும் முடியாமல் எல்லாவற்றையும் தளர்த்தி வருகின்றன.இந்நிலையில், சென்னையில் கிண்டி, அம்பத்தூர் பகுதி தொழிற்பேட்டை உள்பட 17 தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் நாளை முதல் செயல்படுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். அதே சமயம், சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.
தொழில் நிறுவனங்களில் 25 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களை பணிக்கு அழைக்கக் கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். காய்ச்சல் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும் என்பது உள்படப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலால் தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகளைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.