என் தலையை வெட்டுங்க.. மம்தா பானர்ஜி கோபம்..

மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசை குறை கூறியவர்களுக்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, வேண்டுமானால், என் தலையை வெட்டுங்க.. என்று கோபம் கொண்டார்.மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த வேளையில், அம்பன் புயல் கொடூரமாக தாக்கியது. ஒடிசாவிலும் புயல் பாதிப்பு இருந்தலும், மேற்கு வங்கத்தில்தான் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேற்குவங்கத்தில் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து மூடப்பட்டது.

பல மாவட்டங்களில் பெரிய மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் கரை கடந்து 3 நாட்கள் கடந்த நிலையில், நிவாரணப் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ராணுவத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நிவாரணப் பணிகள் சரியில்லை என்றும், திரிணாமுல் காங்கிரஸ் அரசு முன்னேற்பாடுகளை செய்யத் தவறி விட்டது என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. மின்சார விநியோகம் இன்னும் சீரடையாதது பற்றியும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்தவர்,நாங்கள் இரவு பகலாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பொறுமை காக்க வேண்டும். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட சூழலில், நான் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் என் தலையை வெட்டுங்க... அம்பன் புயலால் 86 பேர் பலியாகியிருக்கின்றனர். 70 சதவீத மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய அரசு இந்த பாதிப்புகளை சரி செய்வதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி தர வேண்டும் என்றார். மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் சார்பில் ரூ.1000 கோடி அளிப்பதாக கூறியுள்ளார்.

More News >>