தமிழ் பேசினால் தமிழ் வளராது என்பது ரஜினி கண்டுபிடிப்பு - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
தமிழ் பேசினால் தமிழ் வளராது என ரஜினிகாந்த் கண்டுபிடித்துள்ளார். அப்பா, அம்மா என அழைப்பதற்கு பதில், மம்மி டாடி என அழைக்க ரஜினி அறிவுறுத்துகிறார் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர். போன்று சிறந்த ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும் என்றும், தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழர்கள் வளர்ந்தால் தான் தமிழ் வளரும் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ் பேசினால் தமிழ் வளராது என ரஜினிகாந்த் கண்டுபிடித்துள்ளார். அப்பா, அம்மா என அழைப்பதற்கு பதில், மம்மி டாடி என அழைக்க ரஜினி அறிவுறுத்துகிறார். தமிழ் பேசினால் தமிழ் வளராது என்ற ரஜினியின் உரையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
நடிகர்கள் எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப்போல் ஆகிவிட முடியாது. எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருகிறேன் எனக்கூறி அரசியலில் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.
உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. அதனைப்போல் ரஜினி என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. அரசியலுக்கு வருபவர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லத்தான் செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.