19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிரமாகக் கொளுத்துகிறது. தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் கடந்த வாரம் மழை பெய்தது.

தற்போது 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் அறிவிப்பு வருமாறு:தமிழகத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.விருதுநகர், ராமநாதபுரம் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, அனல் காற்று வீசக்கூடும்.சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>