கொரோனாவுக்கு மலேரியா மருந்து.. டபிள்யூ.எச்.ஓ. தடை

கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம்(டபிள்யூ.எச்.ஓ) பரிந்துரைத்துள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோய்க்குத் தடுப்பு மருந்தோ, சிகிச்சை மருந்தோ இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து, கொரோனா காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்பட்டது.

இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, இந்தியாவிடம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியது. எனினும், இந்த மாத்திரைகள் சில நோயாளிகளுக்குப் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், கொரோனாவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேசியஸ் கூறுகையில், லான்செட் ஆய்வில் ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவதில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சில நோயாளிகளுக்குப் பக்க விளைவுகளும் ஏற்படுத்துவதால், இந்த மருந்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது என்றார்.

More News >>