போயஸ் கார்டன் வீடு ஜெ. நினைவிடம் ஆகுமா? ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..
ஜெயலலிதாவின் 2ம் நிலை வாரிசுகளாக தீபக், தீபா ஆகியோரை சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. மேலும், போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா நினைவிடம் ஆக்குவது குறித்தும் தீர்ப்புக் கூறியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் பங்களா உள்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகி ராமன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தனர்.
போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் உள்பட ரூ.913 கோடிக்குச் சொத்துக்கள் உள்ளதாகவும், அவற்றைச் சரியாக நிர்வகிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர்.வழக்கில் எதிர் மனுதாரர்களான ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள் தாங்களே ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கக் கோரினர். இதற்கிடையே, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது.
இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர். அதில் கூறப்பட்டதாவது:மக்கள் வரிப்பணத்தில் தனியார்(ஜெயலலிதா) சொத்துக்களை அரசு வாங்கத் தொடங்கினால், அதற்கு முடிவே இல்லாமல் போய் விடும். எனவே, போயஸ் கார்டன் வீட்டை அரசு வாங்கினாலும், அதில் ஒரு பகுதியை மட்டும் நினைவிடமாக மாற்றலாம். இன்னொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வமான இல்லமாக ஏன் மாற்றக் கூடாது? இது பற்றி, அரசு பரிசீலிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.