என்னை விட தகுதியுள்ள பிரணாப் முஹர்ஜி பிரதமராக தேர்வாகவில்லை - மன்மோகன் சிங்
தான் அரசியல்வாதியானது ஒரு விபத்து என்றும், நாட்டின் பிரதமராவதற்கு தன்னைவிட அதிக தகுதி படைத்தவர் பிரணாப் முகர்ஜி என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது அனுபவங்களை பதிவு செய்து 'தி கோயெலிஷன் இயர்ஸ்' (The Coalition Years) என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மூன்று வரிசைகள் வெளியிட்டுள்ள பிரணாப் முஹர்ஜி நான்காவது வரிசையையும் டெல்லியில் நேற்று 13-10-17 வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய மன்மோகன் சிங், பிரணாப் முஹர்ஜியுடன் நீண்ட காலம் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். 1970ஆம் ஆண்டுகளில் தான் நிதிச் செயலாளராக இருந்த போது, முஹர்ஜி நிதி அமைச்சராக இருந்ததையும், 1980ஆம் ஆண்டுகளில் தான் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், முஹர்ஜி நிதி அமைச்சராக பணியாற்றியதையும், 1990ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் ஆட்சி காலத்து அமைச்சரைவில் இருவரும் இணைந்து பணியாற்றியதையும் குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் "கடந்த 2004-ம் ஆண்டில் சோனியா காந்தி என்னைப் பிரதமராக தேர்வு செய்தார். பிராணப் முகர்ஜி போன்ற தகுதிபடைத்தவர்கள் இருந்தபோதும் சோனியா காந்தி என்னைப் பிரதமராக தேர்வு செய்தார். அப்போது, என்னைவிட அதிக தகுதி படைத்த பிரணாப் ஒருவேளை நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படாமல் போனது குறித்து வருத்தப்பட நேர்ந்திருந்தால் அந்த காரணம் சரியானதே. ஆனால், அந்த முடிவு குறித்து அப்போது நான் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது அவருக்கு தெரியும்” என்றார்.
மேலும், “அவர் பிரதமராக செய்யப்படுவோம் என்று நம்பியதற்கு நிறைய காரணங்கள் இருந்தது. ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. ஆனாலும் இது போன்ற காரணங்களால் எங்களது தோழமை பாதிக்கப்படவில்லை. மாறாக எங்களது நட்பு மேலும் மேலும் வலுவடைந்தது. இதற்கு மேலும், நாங்கள் உயிரோடிருக்கும் வரை எங்களது நட்பு நீடிக்கும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அமைச்சரவை மென்மையாக இருந்தது என்றால், அதன் பெருமை அனைத்து பிரணாப் முஹர்ஜியையே சாரும். அங்கு எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை. நான் அரசியல்வாதியானதும்கூட ஒரு விபத்தே. ஆனால், பிரணாப் விருப்பப்பட்டு அரசியல்வாதியானவர். தற்காலத்தில் மிகச் சிறந்த காங்கிரஸ்காரர் பிரணாப் முகர்ஜி" எனத் தெரிவித்துள்ளார்.