இந்தியா-சீனா பிரச்சனையில் அமெரிக்கா உதவத் தயார் அதிபர் டிரம்ப் பேச்சு..

இந்தியா, சீனா இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது. மேலும், கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களாக இருதரப்பு வீரர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர். இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைக்கோட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்க்க இருநாடுகளுக்கு இடையே சமரசம் பேசுவதற்கு அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது. இதை அந்த நாடுகளுக்குத் தெரிவித்துள்ளோம்“ என்று கூறியிருந்தார்.

இதற்குச் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் உடனடியாக பதிலளித்தார். அவர் கூறுகையில், இந்தியாவுடன் எழுந்துள்ள பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் தான் உள்ளது. இரு நாடுகளும் இந்த பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளும் என்றார்.ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா உதவத் தயாராக உள்ளதாக டிரம்ப் கூறிய போது, இந்தியா அதை மறுத்தது. மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா எப்போதும் ஏற்காது என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

More News >>