பெரியார், லெனின் சிலை உடைப்பு விவகாரம் - கருத்தை வாபஸ் வாங்கினார் எச்.ராஜா
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ளது. லெனின் சிலை அகற்றப்பட்டதை இந்தியாவெங்கும் பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இது குறித்து தமிழக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, “லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை; நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என்று ராஜா குறிப்பிட்டுள்ளார். இதற்கு நாடெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தனது கருத்திற்கு எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்த தனது முகநூல் பதிவில், “நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.
ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது” என்று தெரிவித்துள்ளார்.