சீன விவகாரம் பற்றி மோடியுடன் டிரம்ப் பேசவே இல்லை..

பிரதமர் மோடியுடன் சீன விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசவே இல்லை என்று இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. கடைசி ராணுவ முகாம் உள்ள கரகாம்பாஸ் பகுதிக்குச் செல்லும் பாதையில் ஒரு பாலம் கட்டும் பணியும் நடைபெறுகிறது. இந்த பாதை அமைந்து விட்டால், அந்த முகாமுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.இந்த சாலைப் பணியைத் தடுப்பதற்காகச் சீன படைகள் வேண்டுமென்றே இந்தியப் படைகள் மீது மோதலை தொடங்கின. இதையடுத்து, கடந்த சில நாட்களாக இருதரப்பு வீரர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர். இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்தியா, சீனா எல்லையில் பதற்றம் நீடிப்பதால் இந்தியா கவலையாக இருக்கிறது. சீனாவும் கவலையாக இருக்கிறது. பிரதமர் மோடியுடன் பேசினேன். அவர் இந்த சீன விவகாரத்தால் நல்ல மனநிலையில் இல்லை என்று கூறினார்.ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் கடைசியாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கேட்ட போதுதான் பிரதமர் மோடியுடன் பேசினார். அதற்குப் பிறகு அவர் மோடியுடன் பேசவே இல்லை. அதிலும் சீனா விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் எதுவும் பேசப்படவில்லை என்றனர்.

More News >>