மே31ல் திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. ஸ்டாலின் அறிவிப்பு..

இட ஒதுக்கீடு மற்றும் கொரோனா தடுப்பு பணி குறித்து விவாதிப்பதற்காக வரும் மே 31ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. தமிழகத்தில் 19,372 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 145 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்கும் பணியில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த இரு பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வரும் 31ம் தேதி மாலை 4.30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்படும். இதில், மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மறுப்பது, கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்என்று கூறப்பட்டுள்ளது.

More News >>