சினிமா ஆகப்போகும் பிரான்ஸ் ஸ்டன்ட் மாஸ்டரின் ஆக்ஷ்ன் குறும்படம்.. கவுதம்மேனனிடம் பணியாற்றிய பென்னி, மாயா புது முயற்சி..
நாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர், நகைச்சுவையாளர் என்று பன்முகத் திறன் கொண்ட மாயா கிருஷ்ணனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படம் மாயா அன்லீஷ்ட்'. பெண் ஆக்ஷ்ன் காட்சிகளைக் கொண்ட படங்கள் எதுவும் இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. இவ்வாறு உருவாகும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற சண்டைக் கலைஞரான யானிக் பென் வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இப்படம் முழுக்க முழுக்க பாரீஸில் உருவாக்கப்பட்டிருக்கிறது. யானிக் பென் மற்றும் மாயா இருவரும் கவுதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்து பணியாற்றியவர்கள். சண்டைக் காட்சிகளில் மாயாவின் திறமைகளைக் கண்டு வியந்த யானிக், அவரது முழுத் திறமையும் வெளிப்படும் வகையில் ஒரு குறும்படத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்.'மாயா அன்லீஷ்ட்' படத்தின் முன்னோட்டத்தில் "மாயாவின் திறமைகளை நான் தான் முதலில் கண்டு பிடித்தேன்" என்று பெருமை பொங்கத் தெரிவித்திருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.
"இந்தப் படைப்பின் பின்னணியில் இருக்கும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்" என்று உணர்ச்சி பொங்கத் தெரிவித்த மாயா, தொடர்ந்து கூறியதாவது...."ஒழுக்கமான பயிற்சி, கடினமான உழைப்பு மற்றும் ஒட்டு மொத்த குழுவும் என் மீதி வைத்திருந்த நம்பிக்கை ஆகியன இல்லாவிட்டால் இது சாத்தியப்பட்டிருக்காது. குறிப்பாக இந்த வேடத்துக்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று என் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்த யானிக் பென்னுக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்"
பிரத்தியேகமான இரண்டு வாரத் தீவிர பயிற்சிக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த குறும்படத்தை முழு நீள கதையாக தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது. சரியான ஆதரவு கிட்டும்போது இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று மாயா மேலும் தெரிவித்தார். கலை மீதான அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடு - குறிப்பாக நடிப்பின் மீது கொண்ட வேட்கை, ஏராளமான இதயங்களை மாயாவின் பக்கம் ஈர்த்திருக்கிறது. நகைச்சுவையை மேம்படுத்துதல், கதை சொல்லல் என பல்வேறு கலை தொடர்பானவற்றில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறார் மாயா. இமா சாவித்ரி, வீணா பாணி, கெளமாரன வல்லவன், ஆரியன் நெளச்கின் மற்றும் ராஜிவ் கிருஷ்ணன் ஆகிய குருநாதர்களிடம் கற்றுத் தேர்ந்த மாயா, தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பதும், கடினமான பயிற்சிகளைச் செய்வதுமாகவே இருக்கிறார்.
மாயாவிடமுள்ள அபார நடிப்பாற்றல், இயல்பான கவர்ச்சி, குன்றாத ஒழுக்கம் ஆகியவற்றை நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் வியந்து பாராட்டுகின்றனர். யானிக் பென்னைப் பொறுத்தவரை அமேசான் ப்ரைம் சீரியஸின் தி பேமிலி மேன், சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஃப்யுரி, ஆகியவற்றைத் தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா-இமைபோல் காக்க ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். மார்க் டேவிட் இயக்கிய 'மாயா அன்லீஷ்ட்' மார்க் டேவிட் ஆக்ஷன் டிசைன், ஜி.ரத்தினவேலு, மற்றும் ஒயில்ட் வோர்ல்ட் ஸ்டண்ட் டீம் ஒன்றிணைந்து இக்குறும்படத்தை உருவாக்கியிருக்கிறது.