தமிழகத்தில் 5ம்கட்ட ஊரடங்கு.. சென்னை தவிர பிற ஊர்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்..

தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. எனினும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மத்திய அரசின் உத்தரவுப்படி, ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்படி, வழிபாட்டு தலங்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்குத் தடை தொடரும். ஓட்டல், ரிசார்ட்ஸ், ஷாப்பிங் மால்கள், பள்ளி கல்லூரிகள், சர்வதேச விமானப் போக்குவரத்து, மெட்ரோ, மின்சார ரயில்கள் ஆகியவற்றுக்கான தடை நீடிக்கும். அதே போல், சமூக, அரசியல், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குத் தடை நீடிக்கும்.

துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அரசு போக்குவரத்து மண்டலங்கள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. கோவை, நீலகிரி,ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் ஆகியவை முதல் மண்டலமாகவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் 2வது மண்டலமாகவும், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகியவை 3வது மண்டலமாகவும், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகியவை 4வது மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அதே போல், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவை 5வது மண்டலமாகவும், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி, தென்காசி ஆகியவை 6வது மண்டலமாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவை 7வது மண்டலமாகவும், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி 8வது மண்டலமாகவும் பிரிக்கப்படுகிறது.

இவற்றில் 7, 8வது மண்டலங்களைத் தவிரப் பிற மண்டலங்களில் 50 சதவீத பஸ்கள் நாளை முதல் இயக்கப்படும். பஸ்களில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அந்தந்த மண்டலங்களுக்குள் செல்வதற்கு வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. பிற மண்டலங்களுக்குச் செல்வதற்கும், பிற மாநில போக்குவரத்துக்கும் தடை நீடிக்கும்.

சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் வாகனங்களில் 40 ஊழியர்களை அழைத்து வரலாம். தனியார் கம்பெனிகள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அதே போல், ஷோரூம், பெரிய கடைகள் இயங்கலாம். ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். உணவகங்களில் 50 சதவீத இடங்களில் மக்களை அமரவைத்து உணவருந்த அனுமதிக்கலாம்.டாக்ஸிகளில் 3 பயணிகளையும், ஆட்டோக்களில் 2 பேரையும் பயணம் செய்ய அனுமதிக்கலாம். முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் நாளை முதல் செயல்படலாம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

More News >>