தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை சட்டமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இதன் பிறகு, நான்கு நாட்களுக்கு விவாதம் நடந்தது. பின்னர், சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை திறந்து வைப்பதற்காக கடந்த மாதம் 12ம் தேதி சட்டமன்றம் மீண்டும் கூடியது.

கடந்த 2017 - 2018ம் நிதியாண்டு மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், இந்த மாதம் இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதைதொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையுடன் துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தயார் செய்து வருகிறார்.

இந்நிலையில், வரும் 15ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகரின் தனிப்பிரிவு செயலாளராகவும், சட்டமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட சீனிவாசன் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 15.3.2018ம் தேதி வியாழக்கிழமை, காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டி உள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2018&2019ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

More News >>