பைக் ஓட்டியபடி டென்னிஸ் - தமிழக இளைஞர் அபார சாதனை
இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி டேபிள் டென்னிஸ் விளையாடி சாகசத்தை நிகழ்த்தி தமிழக வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே உள்ள இலுப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (29) எம்.பி.ஏ., படித்துள்ளார். குடும்ப வறுமையின் காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில், தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
திருவண்ணாமலையில் திருவிழாக்காலங்கள் மற்றும் முழுநிலவு நாட்களில், காவல்துறையினருடன் இணைந்து, சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார். இவர், சிறு வயதில், சைக்கிளில் சாகசம் செய்ய முயன்றார். அதன் பலனாக,ஓடும் சைக்கிளில், தியானம் செய்தல், சைக்கிள் சீட்டின் மேல் படுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்தல், எழுந்து நின்று, உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை செய்தார்.
பின்னர் படிப்படியாக ஓடும் பைக்கில், இதே சாகசங்களை செய்ய பழகினார். தற்போது, 40 கி.மீட்டர் முதல், 60 கி.மீட்டர் வேகத்தில், அப்பாச்சி பைக்கை ஓடவிட்டு, அதிலும், நின்று கொண்டும், பல்வேறு விதமான சாகசங்களையும் செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் செவ்வாயன்று (மார்ச் 6) இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி டேபிள் டென்னிஸ் விளையாடி சாகசத்தை நிகழ்த்தினார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கூறிய சந்தோஷ் குமார், “சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சாகசங்களை செய்து வருகிறேன்.
பல சாகசங்களை மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். எனக்கு யாராவது உதவி செய்ய முன்வந்தால், பயிற்சியை தொடர்ந்து செய்து, பல்வேறு சாதனைகள் படைக்க முடியும், விளையாட்டுத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியர்களிடமும் எனது கோரிக்கையை தெரிவித்துள்ளேன். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், ஊக்கப்படுத்தி, உதவி செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்” என்று தெரிவித்தார்.