மகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், இன்று பிற்பகல் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலுக்கு இடையே, வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த அம்பன் புயல், மேற்கு வங்கத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த மாநிலம் பெரும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது.

தற்போது நாட்டிலேயே அதிகமாக கொரோனா பரவலில் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவுக்கு அதே போல் நிசர்கா புயலால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான புயலுக்குத்தான் நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, அரபிக் கடலில் மத்திய கிழக்குப் பகுதியில் அலிபாக் நகருக்குத் தென்மேற்கில் 165 கி.மீ. தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 215கி.மீ. தொலைவிலும் நிசர்கா புயல் மையம் கொண்டிருந்தது.

இந்த புயல் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கம் தற்போதே மகாராஷ்டிராவில் தெரியத்தொடங்கி விட்டது. ரெய்காட், ரத்தினகிரி போன்ற இடங்களில் சூறாவளி வீசி வருகிறது. இந்த புயலால் மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவிலும், குஜராத், கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஓரளவுக்கும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, மும்பைக்கு ரயில் சர்வீஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 20 குழுக்கள் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மும்பையில் 8 குழு, ராய்காட் 5, பால்கர் 2, தானே 2, ரத்தினகிரி 2, சிந்துதுர்க்கில் ஒரு குழு என்று தற்போது மீட்புப் பணியில் படைகள் இறங்கி விட்டன.

More News >>