அமெரிக்காவில் கலவரம்.. காந்தி சிலை அவமதிப்பு...

அமெரிக்காவில் நீடிக்கும் கலவரங்களுக்கு இடையே வாஷிங்டன் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலை மீது பெயின்ட் வீசி சிலர் அவமதிப்பு செய்துள்ளனர்.அமெரிக்காவில் மின்னேசோட்டா மாகாணத்தில் மின்னேபோலிஸ் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் என்பவரை ஒரு குற்ற வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர். சாலையில் அவரை இழுத்துச் சென்ற போலீசார், அவரை கீழே தள்ளி, கழுத்தில் பூட்ஸ் காலால் மிதித்து நெறித்ததில் பிளாயிட் உயிரிழந்தார். இது அமெரிக்காவில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

மின்னேசோட்டா மாகாணத்தில் தோன்றிய வன்முறை, கலவரச் சம்பவங்கள் அனைத்து மாகாணங்களுக்கும் பரவியது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வளாகத்திற்கு உள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்து கலவரம் செய்தனர். இதையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டு கலவரங்கள் ஒடுக்கப்பட்டன.

இந்நிலையில், வாஷிங்டன் நகரில் இந்தியத் தூதரகத்திற்கு வெளியே உள்ள மகாத்மா காந்தி சிலையைச் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். காந்தி சிலை மீது ஸ்பிரே பெயின்ட் வீசி, அசிங்கப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியத் தூதரகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. வாஷிங்டன் பார்க் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More News >>