மேற்கு நாடுகளை ஏன் பார்க்கிறீர்கள்.. தொழிலதிபர் பஜாஜ் கேள்வி..

கொரோனா வைரஸ் தாக்கத்தில், நாம் மேற்கு நாடுகளையே ஏன் ஒப்பிட வேண்டும்?. கிழக்கு நாடுகளைத்தான் கவனித்திருக்க வேண்டும் என்று தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களிடமும் வீடியோகான்பரன்சில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

இதன்பிறகு, பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால், அவற்றை மத்திய அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.இதே போல், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்படப் பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்களிடம் வீடியோ கான்பரன்சில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி அந்த கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் பிரபல தொழிலதிபர் ராஜீவ் பஜாஜுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ராஜீவ் பஜாஜ் கூறுகையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரு பாதிப்பு என்றால், அது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாகிறது. கொரோனாவால் அந்நாடுகள் பாதித்ததால், அது உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அதே சமயம், ஆப்ரிக்க நாடுகளில் பசிப்பிணியால் தினமும் 8 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன. இதை யார் கண்டு கொள்கிறார்கள்? கொரோனா தாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே நாம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளையே ஒப்பிட்டு வருகிறோம். இது தவறு. நான் கிழக்கு நாடுகளைத்தான் கவனித்திருக்க வேண்டும். அந்த நாடுகளின் நிலைமைகள், நமது நாட்டு தட்பவெப்ப நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை குறித்துத்தான் நாம் கவனித்து முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஊரடங்கிற்கு பிறகும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஊரடங்கின் மூலம் நாம் வைரஸ் பாதிப்பு உயர்வைத் தடுத்து நிறுத்தவில்லை. மாறாக, உற்பத்தி உயர்வு விகித வளர்ச்சியை(ஜி.டி.பி.) நாம் நிறுத்தி விட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

More News >>