ஜூன் பாதியில் தினம் 15000 தொடும் கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் ஜூன் மாதம் பாதியில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவும் என்று சீன ஆய்வு தெரிவித்துள்ளது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 18 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. மேலும், அந்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிக பாதிப்புள்ள நாடுகளில் 7வது இடத்திற்கு வந்துள்ள இந்தியாவில் தற்போது 2.16 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 48 சதவீதம் பேர் குணமடைந்து விட்டனர். அதே சமயம், 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் 10 நாளில் இந்தியாவில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கும் என்று சீனாவின் ஆய்வு தெரிவிக்கிறது. வடமேற்கு சீனாவில் கான்ஷு மாகாணத்தில் உள்ள லான்ஷு பல்கலைக்கழகத்தில், கொரோனா ஆய்வு அமைப்பு செயல்படுகிறது.குளோபல் கோவிட்19 பிரடிக்ட் சிஸ்டம் என்ற இந்த அமைப்பு, இந்தியாவில் கொரோனா பரவும் விதத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் மாதம் பாதியில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் எண்ணிக்கை தினம் 15 ஆயிரம் என்ற அளவுக்கு உயரும். வரும் நான்கைந்து நாட்களில் தினமும் ஏறக்குறைய 9676, 10078, 10,498, 10,936 என்ற அளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆய்வில் ஜூன் 2ம் தேதியன்று இந்தியாவில் 9291 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, இது 8909 ஆக இருந்தது. அதே போல், மார்ச் 28ல் கொரோனா பாதிப்பு 7607 ஆக இருக்கும் எனக் கூறியிருந்தது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, 7467 ஆக இருந்தது. சீன ஆய்வின் கணிப்பில் சற்று குறைந்திருந்தாலும் புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்டச் சரியாகவே இருந்துள்ளது. எனவே, அடுத்த வாரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 15 ஆயிரத்தைத் தொடும் எனத் தெரிகிறது.

More News >>