குறைந்த சம்பளப் பட்டியலில் தோனி!- புதிய முறையை அறிமுகப்படுத்திய பிசிசிஐ

இந்தியக் கிரிக்கெட் சங்கத்தின் புதிய விதிமுறை ஒப்பந்தத்தின்படி முன்னாள் கேப்டன் தோனிக்கு இரண்டாம் அடுக்கு சம்பளம் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2017 முதல் செப்டம்பர் 2018-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் குறித்த ஒப்பந்தப் பட்டியலை இந்தியக் கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதல் அடுக்கு சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் கேப்டன் தோனிக்கு தற்போது இரண்டாம் அடுக்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோனி உடன் பந்துவீச்சாளர் அஷ்வினுக்கும் முதல் நிலையிலிருந்து குறைத்து இரண்டாம் அடுக்கு சம்பளம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்த அறிவிப்பின் அடிப்படையில், இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய ஐந்து பேருக்கும் முதல் அடுக்கு சம்பளமாக 7 கோடி ரூபாய் வழங்கப்படும்.

அடுத்ததாக முன்னாள் கேப்டன் தோனி, பந்துவீச்சாளர் அஷ்வின், ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, ரஹானே, சஹா ஆகியோருக்கு இரண்டாம் அடுக்கு சம்பளமாக 5 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மூன்றாம் அடுக்கு சம்பளமாக 3 கோடி ரூபாய் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், சஹால், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வழங்கப்படும். இறுதி நிலையான 1 கோடி ரூபாய் கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே, அக்‌சர் படேல், கருண் நாயர், ரெய்னா, பார்திவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>