என்றும் வாழும் கிரேஸி.. ஜூன்10 நேரலை நிகழ்வில் கமல், பிரபு, குஷ்பு பங்கேற்பு..

கிரேஸி மோகனுடைய ஓராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 10ம் தேதி, சமூக வலைத்தளங்களில் நேரலையில் நடத்தப்படுகிறது.மறக்க முடியாத தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் கிரேஸி மோகன். நாடகங்களிலும், சினிமாக்களிலும் அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. அவர் மறைந்து ஓராண்டு முடிந்து விட்டது. அவருக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை டோக்கியோ தமிழ்ச் சங்கம் நடத்த முடிவு செய்துள்ளது.

என்றும் வாழும் கிரேஸி என்ற தலைப்பில் கிரஸேி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்துள்ளன. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், இந்நிகழ்ச்சியை சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜுன் 10ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிறது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மக்களை நகைச்சுவை வழியே சிரிக்க வைத்து, மகிழச் செய்வதே கிரேஸி மோகனுக்கான உண்மை நினைவேந்தலாக இருக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டும், தற்போது கொரோனா ஊரடங்கில் மக்கள் வீட்டில் இருக்கும் சூழலில் டோக்கியோ தமிழ்ச் சங்கம், கிரேஸி கிரியேசன் நிறுவனத்துடன் இணைந்து கிரேஸி மோகனுக்கான நேரலை சிறப்பு நினைவந்தல் நிகழ்வை ஜுன் 10 அன்று கமல்ஹாசன் முன்னிலையில் பெருமையுடன் வழங்குகிறது.

இதில் 25க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சங்கங்கள் இணைந்துள்ளன. சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் நாசர், பிரபு, குஷ்பு, கே.எஸ்.ரவிக்குமார், சந்தான பாரதி, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பிக்கின்றனர். நிகழ்ச்சியில், கிரேஸி மோகனின் நினைவாகச் சிறப்புப் பாடல் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிரேஸி மோகனின் ரசிகர்கள் இந்நிகழ்வை நேரலையில் கண்டு அவரது நினைவைப் போற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

More News >>