டெல்லியில் ஜூலைக்குள் 5.5 லட்சம் பேருக்கு கொரோனா பரவலாம்..

டெல்லியில் ஜூலை 31ம் தேதியில் ஐந்தரை லட்சம் பேருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதாகத் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். டெல்லியில் தற்போது 25 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. எனினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கூட காய்ச்சல் ஏற்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி கவர்னர் அனில் பைஜால் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில், அரசு தரப்பில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின், துணை முதல்வர் கூறுகையில், டெல்லியில் வரும் 15ம் தேதியன்று சுமார் 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்படலாம். அப்போது 6600 படுக்கை வசதி தேவைப்படும். ஜூன் 30ல் கொரோனா பாதிப்பு ஒரு லட்சமாகும். அப்போது 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும்.

ஜூலை 15ல் 2.25 லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டால், 33 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும். ஜூலை31ல் ஐந்தரை லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்படும், அப்போது 80 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் மாநில அரசு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. மேலும், கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

More News >>