ராயபுரம் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா.. அறிக்கை கேட்கிறது கோர்ட்

சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா பாதித்தது எப்படி, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டிருக்கிறது. நாடு முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், அரசு காப்பகங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக ஒரு வழக்கு எடுத்து விசாரித்தது. கடந்த ஏப்.3ம் தேதி இது தொடர்பாக மாநில அரசுகளிடம் அறிக்கையும் கேட்டது.

இந்நிலையில், சென்னை ராயபுரம் அரசு காப்பகத்தில் 35 சிறுவர்கள் மற்றும் 5 ஊழியர்களுக்கு கொரோனா பரவியிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நாகேஷ்வரராவ், கிருஷ்ணா முரளி, ரவீந்திரா பட் ஆகியோர் விசாரித்தனர்.

ராயபுரம் காப்பகத்தில் எப்படி இத்தனை சிறுவர்களுக்கு கொரோனா பரவியது. அவர்களைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கை ஜூலை 6ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

More News >>