தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே 28,924 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 49 பேரும் அடக்கம்.

குவைத் 2, சவுதி 1, கத்தார் 7, டெல்லி 5, அந்தமான் 1, பஞ்சாப் 1, டெல்லி 14, கேரளா 2, மகாராஷ்டிரா 15, தெலங்கானா 1 என்று வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை 40,698 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 18 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 367 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் நேற்று 16,889 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 6 லட்சத்து 42,201 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று 1477 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 2569 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் 1752 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 650 பேருக்கும், கடலூரில் 527 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.

More News >>