எச்.ராஜா விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் - திருவாய் மலர்ந்த ரஜினிகாந்த்
பெரியார் சிலை விவகாரம் குறித்து எச்.ராஜா வருத்தம் தெரிவித்துவிட்டார் என்றும் எனவே அதனை பெரிதாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது.
59 தொகுதிகளில் 35 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான பூர்வகுடி மக்கள் கட்சி 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தம் 43 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 16 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வென்றது.
இந்நிலையில், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகமெங்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து அவர், தனக்கு தெரியாமல் நேர்ந்தது என்று கூறியிருந்தார்.
பெரியார் சிலையை இடிப்பேன் என்று தெரிவித்து இருந்ததற்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பாமக என அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தன. பிறகு கமல்ஹாசன் அனைத்து சிலைகளையும் அகற்றினால், பெரியார் சிலையையும் அகற்றலாம் என தெரிவித்து இருந்தார்.
ஆனால், ரஜினிகாந்த் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், இன்று இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘பெரியார் சிலை அகற்றப்படும் என்று சொன்னதும் அதனை சேதப்படுத்தியதும் காட்டுமிராண்டிதனம். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்துவிட்டார். எனவே அதனை பெரிதாக்க வேண்டாம்’’ என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.