இந்தியாவில் கொரோனா பலி 10 ஆயிரம் நெருங்குகிறது..

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இது வரை 9195 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, தினமும் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 20,992 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 62,379 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 49,348 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 311 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 9195 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 4568 பேருக்கும், தமிழ்நாட்டில் 42,689 பேருக்கும், டெல்லியில் 38,958 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.2 லட்சத்தைத் தொட்ட நிலையில், உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>