டெல்லியில் 2 நாளில் இரட்டிப்பு பரிசோதனை.. அமித்ஷா தகவல்

டெல்லியில் 2 நாளில் கொரோனா பரிசோதனை இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்றும், 500 ரயில்வே பெட்டிகளில் கொரோனா படுக்கை வசதி செய்யப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.இந்தியாவில் இது வரை 3 லட்சத்து 20,922 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 4568 பேருக்கும், தமிழ்நாட்டில் 42,689 பேருக்கும், டெல்லியில் 38,958 பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

டெல்லியில் இம்மாத இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரவலாம் என்றும் ஜூலை இறுதிக்குள் இது 5.5 லட்சமாக உயரலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைகள் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் கொரோனா நோயாளிகளுக்காகப் படுக்கை வசதிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லி கொரோனா தடுப்பு பணி ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கவர்னர் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ்சிசோடியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர், அமித்ஷா கூறியதாவது:டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசு தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறது. கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கொரோனா சிகிச்சை வார்டுகளுக்காக 500 ரயில் பெட்டிகள், படுக்கை வசதியுடன் தயார் செய்யப்படும்.

டெல்லியில் இன்னும் 2 நாளில் கொரோனா பரிசோதனை இரட்டிப்பாக்கப்படும். 6 நாளில் மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். டெல்லியில் ஒரு ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்படும். இதில் தொடர்பு கொண்டால் எய்ம்ஸ் டாக்டர்களின் உதவி கிடைக்கும். டெல்லியில் அனைவருடைய மொபைல் போனிலும் ஆரோக்ய சேது செயலி பதிவிறக்கம் செய்யப்படும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

More News >>