கொரோனா ஊரடங்கு தளர்வு.. மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை..

இம்மாதம் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுறும் நிலையில், சென்னையில் இதை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாட்டிலேயே கொரோனா பரவலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 14 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. சென்னையில் மட்டுமே 31,896 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

இந்நிலையில், இம்மாதம் 30ம் தேதியுடன் கொரோனா ஊரடங்கு முடிகிறது. ஏற்கனவே பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. தற்போது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பரவி வருவதால், இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டுமா, அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை.

இது தொடர்பாக, தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக, பகல் 12 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும்.வரும்17-ம் தேதி, தமிழகம் உள்பட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். அப்போது தமிழக நிலவரம் குறித்து அவரிடம் முதலமைச்சர் தெரிவிப்பார். அதன்பிறகுதான், சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.

More News >>