சென்னையில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்.. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை..
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 44,661 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தற்போது சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, மருத்துவ நிபுணர் குழு சார்பில் டாக்டர் குகானந்தம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்த பிறகுதான் பரவுவது குறையும் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போதுதான், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும்.
பரிசோதனைகள் அதிகமாகச் செய்தால், பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்தால்தான் உயிரிழப்பைத் தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென்று கூறியுள்ளோம். சென்னையில் குறிப்பாக 4, 5, 6வது மண்டலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்குத் தடுப்பு பணிகளைக் கவனித்து வருகிறோம். சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகக் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கப் பரிந்துரைத்துள்ளோம். இதில் அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.