தமிழ் சனியனா ..? எச்.ராஜாவின் புதிய கருத்தால் மீண்டும் சர்ச்சை

"தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார், அதற்கான ஆதாரங்கள் உள்ளது" என எச்.ராஜா பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கிறது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக, ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அங்குள்ள லெனின் சிலைகளை அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதற்கு, நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் கணக்கில், “இன்று திரிபுராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என குறிப்பிட்டார். இதற்கு, தமிழ்நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சி தலைவர்களும் ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து, எச்.ராஜா தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தத்தையும் தெரிவித்தார். இருப்பினும் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.இந்த சர்ச்சை கருத்து மறைவதற்குள் மீண்டும் பெரியார் பற்றி கருத்து பேசி புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளது. இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் வசை பாடுகிறார்கள்” என்றார்.

இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய உள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

More News >>