ஓ.பி.எஸ் உள்பட 11 பேர் தகுதிநீக்க வழக்கில் திருப்பம்.. 6 பேருக்கு சபாநாயகர் கடிதம்..

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார்.கடந்த 2017-ஆம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததும், கூவத்தூரில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றது. அந்த அரசு மீது 2017 பிப்ரவரி 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி எதிராக இயங்கிக் கொண்டிருந்தது. இதனால், ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டிய ராஜன் உள்ளிட்ட அதிமுகவின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.அதிமுக கொறடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி, உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, மனுக்களைத் தள்ளுபடி செய்தது. சபாநாயகர் இந்த விஷயத்தில் முடிவு எடுக்காத நிலையில், அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தவோ முடியாது என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதிலும் சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நீதிமன்றம், சபாநாயகர் இந்த விஷயத்தில் உரிய முடிவெடுப்பார் என்று நம்புவதாகத் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இதே போன்று வேறொரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி, திமுக சார்பில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது.இந்நிலையில், இத்தனை நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் அதிமுகவை விட்டுப் பிரிந்திருந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டவையாகும். அவர்களுக்கு அப்போது கொறாடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அதில் கூறியுள்ளார்.

இதையடுத்து, 11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கும் இது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கடிதத்தைச் சட்டப்பேரவை செயலாளர் அனுப்பியிருக்கிறார்.புகார் கொடுத்த அப்போதைய அதிமுக உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், பார்த்திபன், எஸ்.ராஜா, முருகுமாறன் ஆகியோருக்குத்தான் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

More News >>