இந்தியா, சீனா எல்லைத் தகராறு.. அமெரிக்கா உதவத் தயார்..
இந்தியா-சீனா எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா-சீனா மோதலை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தற்போது இருதரப்பிலும் பதற்றத்தைத் தணிக்க உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இருநாட்டு எல்லையில் உள்ள போர் நிலைமைகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து, அமைதிக்கான தீர்மானத்தை அடைவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும். ஏற்கனவே இந்த பிரச்சனைகள் தொடர்பாக இந்தியப் பிரதமரிடம் ஜூன் 2ம் தேதியன்று அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.