கொரோனாவுக்கு ரூ.10 விலையில் நல்ல மருந்து கண்டுபிடிப்பு..

கொரோனாவுக்கு ரூ.10க்கு கிடைக்கும் டெக்சா மெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா, இந்தியாவில் தினமும் 10 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் வராமல் தடுப்பதற்கு மலேரியா சிகிச்சை மருந்தாக உள்ள ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்தலாம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனமோ, இந்த மாத்திரை சாப்பிடுவதில் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இதன்பின், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) மேற்கொண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிறுவனத்தில் உள்ள இந்திய டாக்டர்கள் கூறுகையில், டெக்சாமெத்தாசோன் மருந்து, கொரோனா நோயாளிகளில் அதிகமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நல்ல பலனைத் தருகிறது. வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்குக் குணமாகிறது. அதே போல், சுவாசிக்கத் திணறும் நோயாளிகளில் 5ல் ஒருவருக்கு நல்ல பலனைத் தருகிறது. எனினும், சாதாரண நோயாளிகளுக்கு பெரும் அளவில் பலன் தரவில்லை. இந்த மருந்து இந்தியக் கம்பெனிகளால் நிறையத் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து 10 மி.லி, வெறும் ரூ.10க்கே கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.

More News >>