சென்னையில் கொரோனா பாதித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி..

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொரோனாவால் பலியாகியுள்ளார். சென்னை மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பாலமுரளி(47). இவருக்குக் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கவே, ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.

இதன்பின்னர், நோய் தீவிரமானதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ரூ.2.25 லட்சம் மதிப்பிலான விசேஷ மருந்துகளைச் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வரவழைத்து பாலமுரளிக்கு சிகிச்சை அளிக்க உதவினார்.இதைத்தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார். நேற்று பாலமுரளியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, மாலையில் உயிரிழந்தார். மரணம் அடைந்த பாலமுரளி, வேலூரைச் சேர்ந்தவர். கடந்த 2000-ம் ஆண்டில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பதவி உயர்வில் சென்னையில் கே.கே.நகர், திருவல்லிக்கேணி மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

கடைசியாக அவர் மாம்பலம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது தான் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். மனைவி கவிதா மற்றும் பிளஸ்-1 படிக்கும் ஹர்சவர்தினி என்ற மகளும், 8-வது வகுப்பு படிக்கும் நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர்.பாலமுரளி மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

More News >>