உயிரிழந்த கர்ப்பிணி உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில், காவல் ஆய்வாளரால் எட்டி உதைத்து உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நேற்று இரவு காவல் ஆய்வளர் காமராஜ் உள்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த தம்பதியினரை காமராஜ் தடுத்து நிறுத்த முயன்றபோது தம்பதியினர் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால், பின்தொடர்ந்த காமராஜ் அந்த பைக்கை எட்டி உதைத்துள்ளார்.

இதில், நிலைத்தடுமாறி கணவன் மனைவி இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது, வேன் ஒன்று உஷா என்ற அந்த கர்ப்பிணி மீது மோதியது. இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த உஷாவின் கணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதுதொடர்பாக, காவல் ஆய்வாளர் காமராஜை கைது செய்த போலீசார், அவணை பணியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தனர். இந்நிலையில், உஷாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

More News >>