ஆழ்ந்த உறக்கத்தில் மத்திய அரசு.. ராகுல்காந்தி காட்டம்..

லடாக் பகுதியில் சீனா நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவே இல்லை. சீனப் படைகள் தொடர்ந்து இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஊடுருவி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாட் நாயக் அளித்த பேட்டியில், சீனா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த செய்தியை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது. 1. கல்வானில் சீனாவின் தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல். 2. மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளது. பிரச்சனைகளை மறுத்து வந்துள்ளது. 3. அதற்கான விலையாக நமது ராணுவ வீரர்களை இழந்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

More News >>