ராஜ்யசபா தேர்தலில் பாஜக 8, காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி..
ராஜ்யசபா தேர்தலில் பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் வென்றுள்ளன.பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. எனினும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், பாஜகவின் கொள்கைகளைத் திணிக்கும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது திணறி வருகிறது. அந்த சமயங்களில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, அதிமுக உள்பட ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள கட்சிகளைக் கடைசி நேரத்தில் வளைத்து ஆதரவு திரட்டி நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 19 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் பாஜக 3 இடங்களைப் போட்டியின்றி வென்றது. குஜராத்தில் தேர்தல் நடந்த 4 இடங்களில் காங்கிரஸ் 2 இடங்களை வென்றிருக்க வேண்டும். ஆனால், அங்குக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரை பாஜக பேரம் பேசி, பதவி விலகச் செய்தது. இதையடுத்து, அங்கு ஒரு இடத்தை மட்டுமே காங்கிரஸ் பிடிக்க முடிந்தது. மீதி 3 இடங்களை பாஜக பிடித்தது.
மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரசை வெற்றி பெற விடாமல் தடுக்க பாஜக பல்வேறு பேரங்களில் ஈடுபட்டது. கடைசியில் அங்குக் காங்கிரசைச் சேர்ந்த திக்விஜயசிங் வென்றார். மீதி 2 இடங்களை பாஜகவைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா(காங்கிரசில் இருந்து கட்சி மாறியவர்), சுமர்சிங் சோலான்கி ஆகியோர் வென்றனர்.ராஜஸ்தானிலும் காங்கிரசை வீழ்த்த பாஜக கடும் பிரயத்தனம் செய்தது. ஆனால், அங்குக் காங்கிரசைச் சேர்ந்த நீரஜ்தாங்கி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் வென்றனர். பாஜகவில் ராஜேந்திர கெலாட் மட்டும் வெற்றி பெற்றார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களையும் வென்றது. தெலுங்கு தேசம் ஒரு இடத்தை வெல்ல முடியாமல் போனது.தற்போது ராஜ்யசபாவின் மொத்த பலம் 244 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாஜகவின் பலம் 75ல் இருந்து 86 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசின் பலம் 41 ஆக உள்ளது. பாஜக கூட்டணிக்கு 100 இடங்கள் கிடைத்து விட்டாலும், மெஜாரிட்டி இன்னும் கிடைக்கவில்லை.