கொரோனா எப்போது ஒழியும்.. கடவுளுக்குத்தான் தெரியும்.. கைவிரித்த முதலமைச்சர்..

தமிழ்நாட்டில் கொரோனா எப்போது கட்டுப்படும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: கொரோனா பரவுவதைத் தடுக்க தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால்தான் தமிழகத்தில் கொரோனா பரவியது. சென்னையில் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காகத்தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கான வாய்ப்பு இல்லை. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு குழுக்கள் அமைத்து பணியாற்றி வருகிறார்கள். கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.மக்கள்தான் அரசாங்கம். தனியாக அரசாங்கம் என்று ஒன்று இல்லை. மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே இந்த கொரோனா நோயைத் தடுக்க முடியும். மக்கள் வெளியே செல்லும் போது, முகக் கவசங்களை அணிந்து, கைகளைக் கழுவுவது போன்ற வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்த்தால்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும். கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதித்த 54 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினமும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா இல்லை என்று அவரே மறுத்துள்ளார்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

More News >>