ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய வீரர்கள்..

பாகிஸ்தான் உளவு ஆளில்லா விமானத்தை(டிரோன்) இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், அதிலிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவி அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளின் நடமாட்டம் குறைந்தாலும், ஊடுருவல் தொடர்கிறது. இந்த தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உளவுத் துறை, டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஆயுதங்களை அனுப்பி வருகிறது.இதை இந்தியாவின் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர்(பி.எஸ்.எப்) கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 5.10 மணிக்கு ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் பன்சார் பகுதியில் ஒரு டிரோன் வருவதை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அதைச் சுட்டு கீழே வீழ்த்தினர்.

கீழே விழுந்த டிரோனில் பல ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு எம்4 துப்பாக்கி, 2 தோட்டா மேக்சின், 60 சுற்று வெடிமருந்துகள் மற்றும் ஏழு கையெறி குண்டுகள் கிடைத்துள்ளன. அலி பாய் என்ற தீவிரவாதிக்கு இது டெலிவரி செய்யப்படவிருந்ததாகத் தெரிய வந்துள்ளது என்றார்.

More News >>